search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை"

    குமரி மாவட்டத்தில் போலீசாரின் கண்காணிப்பை மீறி தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
    நாகர்கோவில்:

    தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் எச்சரிக்கையை மீறி லாட்டரி விற்போர் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தடையை மீறுவோரை போலீசார் கண்காணித்து வருகிறார்கள். ஆனால் குமரி மாவட்டத்தில் போலீசாரின் கண்காணிப்பையும் மீறி தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை அமோகமாக நடப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

    குமரி மாவட்டம் கேரள மாநில எல்லையில் இருப்பதால் அங்கிருந்து லாட்டரி சீட்டுக்கள் கடத்தி வரப்பட்டு இங்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அவர்கள் தெரிவித்தனர்.

    இதுபோல ஆன்லைன் மூலமும் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுகின்றன. ஏழை தொழிலாளிகள், கூலி வேலை பார்ப்போர் மற்றும் சிறு வியாபாரிகள் பலரும் அரசின் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வாங்கியும், ஆன்லைன் லாட்டரி மூலமும் பணத்தை இழந்து வருவது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    இது பற்றிய செய்தி நேற்று மாலைமலரில் வெளியானது. இதையடுத்து நாகர்கோவில் நகரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்போரை கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் சந்திப்பில் வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர் தலைமையில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
    அப்போது அவர் துண்டு சீட்டில் லாட்டரி எண்களை எழுதி கொடுத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

    இது பற்றி போலீஸ் உயர் அதிகாரிகள் கூறும்போது, அரசின் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை யாரும் விற்பனை செய்யக்கூடாது. இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக கூறப்படும் வடசேரி, அண்ணா பஸ் நிலையங்கள், மீனாட்சிபுரம், கோட்டார், மணிமேடை, வேப்பமூடு, செட்டிக்குளம், ராமன்புதூர் பகுதிகளில் போலீசார் ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றனர். 
    ×